கரூர் அருகே மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பலி
ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(40). ஈரோட்டில் ஒரு தனியார் கம்பெனியில் சூபர்வைசராக பணியற்றி வந்தார். இவரது மனைவி மோகனா(40). இவர்களது மகன் சுதர்சன் (15), மகள் வருணா (10). மோகனாவின் தாய் இந்திராணி(67). இந்நிலையில் கடந்த 20ம்தேதி மாலை ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு காரில் சென்றனர். இதையடுத்து கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றுமுன்தினம் இரவு ஈரோடுக்கு புறப்பட்டனர். காரை கிருஷ்ணகுமார் ஓட்டினார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆண்டிப்பட்டி கோட்டை அருகே மதுரை- கரூர் பைபாஸ் சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது.இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கிருஷ்ணகுமார், வருணா, இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மோகனா, சுதர்சன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த 2பேரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிருஷ்ணன், வருணா, இந்திராணியின் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்று வரும் வழியில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?