கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு; காதலன் உதவியுடன் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட இருதாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 37).டெய்லரிங் தொழில் செய்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுமதி (34) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். சுமதி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.அதே நிறுவனத்தில் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகுமார் (27) என்ற இளைஞரும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த ஸ்ரீதர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் தங்களது நட்பை தொடர்ந்துள்ளனர். இதனால் ஸ்ரீதர் மற்றும் மனைவிக்கும் குடும்பத் தகராறு ஏற்படவே சுமதி ஒரு கட்டத்தில் கணவரை தீர்த்து கட்ட தனது காதலனை நாடியதாக தெரிகிறது.இதனிடையே நேற்று முன்தினம் மாலை மர்மமான முறையில் ஸ்ரீதர் கண்ணம் சிவந்து, காதில் ரத்தம் வழிந்தவாறு உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த ஸ்ரீதரின் அண்ணன் சீனிவாசன்(43) தனது தம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.உயிரிழந்த ஸ்ரீதரின் மனைவி சுமதிக்கும், கொத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலகுமார்(27) என்கிற இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், கணவன் ஸ்ரீதர் இடையூறாக இருந்து வந்ததால் சுமதி, பாலகுமார் இருவரும் வீட்டில் இருந்த ஸ்ரீதரை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுமதி, பாலகுமார் இருவரையும் கைது செய்த கெலமங்கலம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?