கஞ்சா விற்பனை பணத்தை கொடுக்காததால் ஆத்திரம்: கட்டையால் சரமாரியாக அடித்து நண்பனை கொன்று காட்டில் புதைப்பு

Sep 24, 2024 - 05:20
 0  3
கஞ்சா விற்பனை பணத்தை கொடுக்காததால் ஆத்திரம்: கட்டையால் சரமாரியாக அடித்து நண்பனை கொன்று காட்டில் புதைப்பு
கஞ்சா விற்பனை பணத்தை கொடுக்காததால் ஆத்திரம்: கட்டையால் சரமாரியாக அடித்து நண்பனை கொன்று காட்டில் புதைப்பு

திருப்போரூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவர், கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சி செங்கண்மால் கிராம ஓஎம்ஆர் சாலையில் கார் பழுது பார்க்கும் நிலையம் நடத்தி வருகிறார்.

இவரது, கடையில் சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம், தம்பிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அபுதாஹிர் என்பவரின் மகன் அப்துல் மஜீத் (22) என்பவர் டிங்கரிங் வேலை செய்துக்கொண்டு, அதே பகுதியில் வீடு எடுத்து வாடகைக்கு தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 18ம்தேதி மாலை 6 மணிக்கு கடையிலிருந்து வெளியே சென்ற அப்துல் மஜீத் வீடு திரும்பவில்லை. மறுநாள் 19ம்தேதி கடைக்கு வராததால் கடையின் உரிமையாளர் வடிவேல், அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டும் முடியாததால் சந்தேகத்தின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார், அப்துல் மஜீத்தின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, தையூர் கோமான் நகர் பகுதியில் செல்போன் சிக்னல் செயல்பட்டு, பின்னர் அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கு, விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர்களிடம் விசாரித்தனர். அப்துல் மஜீத்தின் மோட்டார் சைக்கிள், தையூர் கோமான் நகர் பகுதியை சேர்ந்த சகாயராஜ் என்பவரது வீட்டில் இருப்பதாக அவர்கள் கூறினர்.

அதன்படி, சகாயராஜ் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், அப்துல் மஜீத் தனது நண்பர் என்றும், அவரது மோட்டார் சைக்கிளை தன்னிடம் கொடுத்துவிட்டு சென்றார் என்றும் சகாயராஜ் தெரிவித்தார். இதனால், சகாயராஜ் மற்றும் அவரது நண்பர் விமல்ராஜ், மோகன் (எ) புல்கா மோகன், ஸ்ரீகாந்த் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஒவ்வொருவரும் வெவ்வேறு தகவல்களை தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், 3 பேரையும் ஒன்றாக வைத்து விசாரித்தபோது, தாங்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அந்த வகையில் அப்துல் மஜீத்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து அப்துல் மஜீத் போன்றவர்களிடம் கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாகவும், மற்றவர்கள் ஒழுங்காக பணத்தை கொடுத்து விட்ட நிலையில், அப்துல் மஜீத் ரூ.10 ஆயிரம் வரை கடன் வைத்துவிட்டு தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

இதனால், கடந்த 18ம்தேதி மாலை மது அருந்த அழைத்து சென்றதாகவும், தையூர் கோமான் நகர் விளையாட்டு திடலில் அனைவரும் அமர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது தங்களுக்கு தரவேண்டிய பாக்கி பணம் ரூ.10 ஆயிரத்தை கேட்டபோது, அப்துல் மஜித் திமிராக பேசியதால் ஆத்திரமடைந்து அனைவரும் சேர்ந்து உருட்டு கட்டையால் அடித்துக் காயப்படுத்தியதாகவும், இதில் மயங்கி விழுந்த அப்துல் மஜீத்தை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாகவும், ஆனால் வழியிலேயே உயிரிழந்து விட்டது தெரிந்து விட்டதால், வேறு வழியின்றி தையூர் காட்டுப்பகுதிக்கு எடுத்துச்சன்று பள்ளம் தோண்டி புதைத்து விட்டதாகவும், தங்களுடன் சேட்டு, அபினேஷ், ரூபன், ஆட்டோ டிரைவர் ராகுல் ஆகியோர் இக்கொலை சம்பவத்தை செய்ததாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து நேற்று காலை விமல்ராஜ் மற்றும் புல்கா மோகன் ஆகியோர் அப்துல் மஜீத்தை கொலை செய்து புதைத்த இடத்தை போலீசாருடன் சென்று அடையாளம் காட்டினர். பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன், கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன், கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், தாழம்பூர் ஆய்வாளர் சார்லஸ், திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலையில், அந்த இடத்தில் சடலத்தை தோண்டி எடுத்து, அங்கேயே செங்கல்பட்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடத்தினர்.

மேலும், அப்துல் மஜீத்தின் தந்தை அபுதாஹிர் அங்கு வந்து, தனது மகனின் சடலம்தான் என உறுதிப்படுத்தினார். கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், தையூர் பாலமா நகரை சேர்ந்த மோகன் (எ) புல்கா மோகன் (31),சகாயராஜ் (20), விமல்ராஜ் (20), சேட்டு (23), ஸ்ரீகாந்த் (21), அபினேஷ் (22), ரூபன் (18), திருப்போரூர் மடம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராகுல் (24) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் சகாயராஜ் வீட்டிலிருந்து கொலை செய்யப்பட்ட அப்துல் மஜீத்தின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் ெசய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow