மயானத்தில் திடீர் தீயால் மக்கள் அச்சம்
கருப்பாயூரணி - சக்கிமங்கலம் ரோட்டில் பொது மயானம் உள்ளது. இங்கு அப்பகுதி மட்டுமின்றி பக்கத்து கிராம குப்பைகளும் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இக்குப்பைகள் திடீரென இரவில் தீப்பற்றி எரிவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவில் திடீரென மயானத்தில் கிடந்த குப்பையில் தீப்பிடித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அங்கு திரண்டனர். தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததால், விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.
அப்பகுதி சமூக ஆர்வலர்கள் திவ்யா, முத்துப்பாண்டி கூறுகையில், மயான குப்பையில் கடந்த 2 நாட்களாக திடீரென தீப்பிடித்ததால் 2 நாட்களும் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். குப்பை எரிவதால் கிளம்பும் புகையால் அப்பகுதி குழந்தைகள், முதியோர் பாதிக்கப்படுகின்றனர். கருப்பாயூரணி மட்டுமின்றி பக்கத்து கிராம கழிவுகளையும் இங்கு கொட்டுகின்றனர்.
உணவு தேடி வரும் கால்நடைகள் பாலிதீன் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன. குப்பை, அதில் பற்றி எரியும் தீ குறித்து பிகேஎம் அவென்யூ குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். கலெக்டரிடமும் மனு கொடுக்க உள்ளதாக கூறினார்கள்.
What's Your Reaction?