மதுரை: குழந்தையை ரூ. 10,000 க்கு விற்ற தாய் கைது
மதுரை மாவட்டம், பெருங்குடி அருகே முனியப்பன் நகரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மனைவி ஜோதி(42). இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவரது மகன் ராஜேஷ் (23) மட்டும் தாய் ஜோதியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமையல் வேலை செய்து வந்த ஜோதி, வேலை தொடர்பாக பல இடங்களுக்கு சென்று வந்ததால் ஏற்பட்ட தொடர்பில் கர்ப்பமடைந்து மே மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த மகன் ராஜேஷ், ஜோதியை கண்டித்துள்ளார். இதனால், ஜோதி தன் குழந்தையை ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த வீரணன் மனைவி அபிநயாவிடம், 10, 000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
மேலும், விற்ற குழந்தையை பிரிய மனமில்லாமல், அடிக்கடி பார்க்க கமுதிக்கு சென்று வந்துள்ளார். இதற்கு வீரணன், அபிநயா எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஜோதி பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்த பெருங்குடி விஏஓ அழகேசன் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார், ஜோதி, ராஜேஷ், அபிநயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?