மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த கணவர்; தானும் விஷம் குடித்து தற்கொலை
திருவேங்கடம் அருகே குடும்ப பிரச்னையால் மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த கணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கீழதிருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (60). இவர் தனியார் நிறுவன காவலாளி. இவரது மனைவி சீதாலட்சுமி (57). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு அழகர்சாமி, அய்யனார், சமுத்திரக்கனி என்ற 3 மகன்கள், காமாட்சி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் 2 மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். மற்றொரு மகனுக்கு திருமணம் ஆகவில்லை. அவரும் சென்னையில் வசித்து வருகிறார்.இதனால் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி சீதாலட்சுமி ஆகியோர் சொந்த ஊரில் வசித்து வந்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, வீட்டில் கிடந்த உலக்கையால் மனைவி சீதாலட்சுமியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தபடி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை அடித்துக் கொலை செய்த குற்ற உணர்வு மற்றும் போலீஸ் விசாரணைக்கு பயந்த கருப்பசாமி, விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடினார்.நேற்று காலையில் தெரு நல்லியில் குடிநீர் வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் சீதாலட்சுமி வெகு நேரம் ஆகியும் தண்ணீர் பிடிக்க வராததால் அவர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் கதவை திறந்துள்ளனர்.அப்போது பூச்சிக்கொல்லி மருந்து வாசனை வெளியே வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சீதாலட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அருகில் கொலை செய்ய பயன்படுத்திய உலக்கை முழுவதும் ரத்தமாக காணப்பட்டுள்ளது. கருப்பசாமி விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர், திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய நிலையில் கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார். கொலையான சீதாலட்சுமி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்னையில் மனைவியை கணவர் அடித்து கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
What's Your Reaction?