காயலான் கடையில் ரூ.1.80 லட்சம் பணம் திருடிய 2 பேர் கைது

Sep 24, 2024 - 05:55
 0  6
காயலான் கடையில் ரூ.1.80 லட்சம் பணம் திருடிய 2 பேர் கைது

ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் வசித்து வருபவர் ரகுராம்(52). இவர் அதே பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் காயலான் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் இரண்டு மர்ம நபர்கள் இரவு 10 மணியளவில் இரும்பு கடைக்கு சென்று தாங்கள் கொண்டு வந்த இரும்பு பொருட்களை விற்பனை செய்ய வந்தனர்.

அப்போது கடையின் உரிமையாளர் ரகுராம் கடையில் தூங்கிக்கொண்டு இருந்தார் இதையறிந்த 2 மர்ம நபர்களும் கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்று விட்டனர். பின்னர் தூக்கம் கலைந்து எழுந்த ரகுராம், கல்லா பெட்டியை பார்த்த போது அதிலிருந்த பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ரகுராம் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் எஸ்.ஐ. பிரசன்ன வரதன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சூளைமேனி பகுதியில் சந்தேகப்படும் படியாக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 நபர்களை ரோந்து சென்ற போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலிசார் அந்த 2 வாலிபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த நபர்கள் சூளைமேனி காயலான் கடையில் இரும்பு பொருட்கள் விற்பனை செய்ய சென்ற போது பணம் ரூ.1.80 லட்சத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் முக்கரம்பாக்கம் ஊராட்சியை வண்டிமேட்டு கொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி(26), வேட்டைகாரன் மேடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ்(24) என்பது தெரிந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow