மதுரை: சோழவந்தானில் மீண்டும் ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை அளித்த நிலையில், கடந்த 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், திரௌபதி அம்மன் கோவில், பெரிய கடை வீதி வடக்குரத வீதி, மார்க்கெட் ரோடு, வட்டப் பிள்ளையார் கோவில் பகுதி, பேட்டை பகுதி, ரயில்வே பீட்டர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றிய இரண்டு தினங்களுக்குள் மீண்டும் அதே இடத்தில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகையால், ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?