கேரளா: தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது
பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மதுபாட்டில் விற்பனையில் ஈடுப்பட்ட பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.6 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி ஏப் 25, 26, 27 ஆகிய 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இந்நாட்களில் மறைமுகமாக அதிக விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்வதற்காக மாஹி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலிருந்து மதுபாட்டில் கடத்தல் செய்து மறைமுகமாக விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குழல்மந்தம் ரேஞ்சு கலால் துறை அதிகாரி பிரசாத் தலைமையில் காவலர்கள் மாறு வேடங்களில் கோட்டாயி, பெரிங்கோட்டுக்குறிச்சி, கோட்டாயி, மாத்தூர், சுங்கமந்தம் ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கோட்டாயி 2 நம்பர் ஊராட்சிக்கு உட்பட்ட புளிநெல்லியைச் சேர்ந்த சிவதாஸ் என்பவரின் மனைவி பார்வதி (48) வீட்டில் மறைமுகமாக வெளிநாட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்துள்ளார். இவரை கலால்துறை அதிகாரிகள் சோதனையின்போது கையும் களவுமாக பிடித்தனர். இவரிடமிருந்து 6 லிட்டர் வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவருக்கு உடந்தையாக இருந்த கணவர் சிவதாஸ் தலைமறைவாகியுள்ளார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.அளவிற்கு அதிகமாகவும், மாஹி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி அதிக விலைக்கு விற்பனை நடத்திய பார்வதி என்ற பெண்ணை கலால் துறை இன்ஸ்பெக்டர் பிரசாத் தலைமையில் காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?