அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க விவசாயிகள் கோரிக்கை
மதுரை திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று(செப்.10) விவசாயிகள் குறை தீர் கூட்டம் தாசில்தார் மனேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதற்கு துணைத் தாசில்தார் மாதவன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயி பழனி பேசுகையில், ''குறை தீர் கூட்டத்தில் கூட்டுறவு, மின்சாரம், நெடுஞ்சாலை உட்பட முக்கிய துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இது குறித்து கேட்டால் யாரும் பதிலளிக்கவில்லை'' என்றார்.
இதுகுறித்து பேசிய தாசில்தார், இனிவரும் காலங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க அறிவுறுத்தப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து மற்றொரு விவசாயி மூர்த்தி பேசுகையில், "மேலக்கோட்டை ரயில்வே அண்டர்பாஸ் பாலம் இருளில் உள்ளது. அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இப்பாலத்தை பயன்படுத்துகின்றனர். இப் பகுதியில் இரவில் வெளிச்சம் இல்லாததால் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே பாலத்தில் விளக்குகள் அமைக்க வேண்டும்" என்றார். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.
What's Your Reaction?