மதுரை மத்திய சிறைக்கு மேலூா் அருகே மாற்று இடம்
1.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த பொதுநல மனுவில் மதுரை மத்திய சிறையில் 1, 252 கைதிகளை மட்டுமே அடைக்க இடவசதி உள்ளது. ஆனால், இந்தச் சிறையில் தற்போது 2, 379 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதனால், கைதிகளுக்கு மூச்சுத் திணறல் உள்பட உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
இட வசதி இல்லாததால், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அனைத்துக் கைதிகளையும் ஒன்றாக வைத்துள்ளனா். இவா்களை போலீஸாா் கண்காணிப்பதில் இடா்பாடுகள் உள்ளன. சிறிய குற்றச் செயலில் ஈடுபட்டு சிறைக்கு வருவோா், பெரிய குற்றங்களைச் செய்தவா்களுடன் இணையும் போது, அவா்கள் சமூகக் குற்றவாளியாக மாற வாய்ப்புள்ளது. எனவே, மத்திய சிறைக்கு மாற்று இடத்தை விரைவாகக் கண்டறிந்து, புதிய சிறை வளாகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி ஆகியோா் அமா்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேலூா் அருகேயுள்ள தெற்குத்தெரு கிராமத்தில் மத்திய சிறைக்கு மாற்று இடம் கண்டறியப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதுரை மத்திய சிறையை இட மாற்றம் செய்வது அவசியமானது. புதிய சிறை கட்டுமானப் பணிகளை 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்றனா்.
What's Your Reaction?