தாயை கொலை செய்த மகன் கைது
உசிலம்பட்டி அருகே சொத்திற்காக பெற்ற தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகனை கைது செய்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாமரத்துபட்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தன் மனைவி பாப்பு. கூலி வேலை செய்து வரும் இவருக்கு ஒரு மகள், கண்ணன் என்ற மகன் உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களது மகள், மகன் இருவருக்குமே திருமணம் முடித்து வைத்துவிட்ட சூழலில், தாய் பாப்பு கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை மகளுக்கு மட்டுமே செலவுக்கு கொடுத்து விடுவதாக குற்றம் சாட்டி, பாப்பு குடியிருக்கும் வீட்டை தன் பெயருக்கு எழுதி தர கோரி மகன் கண்ணன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி வழக்கம் போல வீட்டை எழுதி வைக்க கோரி தகராறில் ஈடுபட்ட கண்ணன் தாய் பாப்புவை கல்லால் தாக்கியுள்ளார், இதில் தலையில் படுகாயமடைந்து மயங்கிய பாப்புவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் நேற்று (செப்.,25) பாப்பு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் தாயை கொலை செய்த மகன் கண்ணனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?