போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்சோ வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டை அடித்து உடைத்து, கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல்துறையினர் மீது குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேந்தர் என்பவர் கடந்த ஆண்டு 2023 அக்டோபர் மாதம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சீர்காழி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சீர்காழி காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த சுரேந்தர் கடந்த 18 -ஆம் தேதி இரவு மீண்டும் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து பிரச்சனை செய்து, தங்கள் மகளை கொன்றுவிடுவதாக மிரட்டி வீட்டு உபயோக பொருட்களை அடித்து நொறுக்கி குடும்பத்தினரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக காவல் உதவி எண் 100-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து ஆணைக்காரன்சத்திரம் காவல்நிலைய காவல்துறையினர் வந்து விசாரணை செய்துவிட்டு சென்ற நிலையில் மேற்படி காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் சங்கமித்ரன் என்பவருடன் வந்து புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய காவல்துறைக்கு மனு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்ததது மட்டும் இன்றி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்த நிலையில் மீண்டும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?