நீண்ட கால வயிற்று வலியால் அவதி: தருமபுரி அருகே முதியவர் தற்கொலை

Apr 14, 2026 - 19:30
 0  16
நீண்ட கால வயிற்று வலியால் அவதி: தருமபுரி அருகே முதியவர் தற்கொலை

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, நீண்ட நாட்களாக நீடித்த வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகளால் மனமுடைந்த முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரிய முரசுப்பட்டி அடுத்த பேமன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரா.முருகேசன் (75). விவசாயியான இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி, தத்தமது குடும்பங்களுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

முருகேசனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையான அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காகப் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் ஏற்பட்ட வேதனையினால், கடந்த சில ஆண்டுகளாக அவர் உணவைத் தவிர்த்துவிட்டு, பால் மட்டுமே அருந்தி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல பால் அருந்திவிட்டு உறங்கச் சென்ற முருகேசனை, மறுநாள் காலையில் அவரது மனைவி தேடியபோது வீட்டில் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தபோது, அங்குள்ள அவரது இளைய மகன் முனியப்பனின் வீட்டின் மாடிப்படியில் உள்ள கைப்பிடி கம்பியில் முருகேசன் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்த காரிமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow